Monday, 13 November 2017



தமிழ்த்துறை
அக்டோபர் மாத அறிக்கை – 2017 -2018

ü  தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக 15.09.2017 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரையில் நம் கல்லூரியின் சார்பாக மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி கோ.சரண்யா முதல் பரிசாக ரூ.10,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.

ü  தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக 15.09.2017 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கவிதையில் நம் கல்லூரியின் சார்பாக மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி ர.தாமரைச்செல்வி மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.

Ø  சி.அப்துல் ஹக்கீம் கல்லூரிச் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் நம் கல்லூரிச் சார்பாக இரண்டு மாணவிகள் பங்கு பெற்றனர்.

Ø  தென்றல் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை, கவிதை, கையெழுத்து, ஒவியப்போட்டியில் நம் கல்லூரியின் சார்பாக 12 மாணவிகள் பங்கு பெற்றனர்.



 தமிழ்த்துறைத் தலைவி

செப்டம்பர் மாத அறிக்கை



தமிழ்த்துறை
செப்டம்பர் மாத அறிக்கை – 2017 -2018

Ø  கவியரசர் கலை தமிழ்ச்சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் (கவிதை, கட்டுரை, ஒவியம்) நம் கல்லூரியின் சார்பாக 50 மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.

Ø  ஶ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் இளைஞர் விழாவினை முன்னிட்டு நடைபெற்றப் பேச்சுப்போட்டியில் நம் கல்லூரியின் சார்பாக முதலாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் மாணவி எம்.ஹேமமாலினி முதல் பரிசாக ரூ.10,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.


Ø  கல்வி, கலை, இலக்கியப் பண்பாட்டு விருதுகள் சார்பாக நம் கல்லூரியைச் சார்ந்த 36 மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.


தமிழ்த்துறைத் தலைவி

Monday, 11 September 2017

Tamil Article



உளவியல் நோக்கில் திருக்குறள்


கார்த்திகா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி
வாணியம்பாடி
.
        திருக்குறளை உளவியல் ரீதியாக ஆராயத் தேவை உள்ளது.  சிக்மண்ட் ஃப்ராய்ட் மூன்று உளப்பகுப்பாய்வு கோட்பாட்டை வகைப்படுத்தியுள்ளார். அடிநிலை மனம்(Id) நனவுநிலைமனம் (Ego) மேனிலை மனம்(Super Ego) இவற்றைக் கொண்டு திருக்குறளை ஆராயப்படுகிறது. அதாவது () அடிநிலை மனம் சுயநலத்தோடு செயல்படுவை. எந்தச் சமூகத்திற்கும், மரபிற்கும் கட்டுப்படாமல் செயல்படும். தன் இன்பத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும். அறநெறியைப் பின்பற்றாது.  () நனவுநிலைமனம் என்பது அடிநிலைமனம் செய்யக்கூடிய செயலைச் செய்யாமல் சமுதாய நலனை காக்கத் தடுப்பது அதாவது கட்டுப்படுத்துவது.  () மேனிலைமனம் என்பது மனித வாழ்க்கையில் உயர்ந்தவை மட்டும் கருதப்படுவது. சமுதாயத்தைக் காப்பதற்காக அறநெறியைப் பின்பற்றுவது. இந்த மூன்று கோட்பாடுகளைக் கொண்டு எக்காலத்திற்கும் பொருந்தவனவாக அமையும் திருக்குறளை ஆராயப்பட உள்ளது.
முன்னுரை    
உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறள் நாடு, மொழி, இனம், சமயம் ஆகியவை கடந்து மானுட வாழ்க்கைக்கு மேன்மையுற வழிகாட்டக் கூடிய நூலாகும். “தமிழ்ச் சான்றோர்கள் திருவள்ளுவர்  காலத்தைக் கி.மு. 31 என்றுக் கூறுகின்றனர். சங்க காலத்திற்குப் பிற்பட்ட கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம் என்கிறார் க.. அறவாணன்”.(.51) திருவள்ளுவர் காலத்திலோ அவர்க்கு முந்திய காலத்தில் நிகழ்ந்த அறமற்ற செயல்களைக் தம்மால் ஏற்க முடியாததைக் கண்டித்தும், மனித குலம் எவ்வாறு வாழ வேண்டும், வாழ்வில் எவையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பதைத் தம் மன உணர்வுகளால் ஏற்பட்ட எதிர்ப்பினை இரு வரிகளில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மனிதனின் அழிவுக்கு அவனது மனமும், அதனால் ஏற்படும் உணர்வுகளும் காரணம் என்பதை அறிந்த வள்ளுவப் பெருந்தகை ஒவ்வொரு குறளிலும் அறக்கருத்துக்கள், அறிவியல் பூர்வமாக உணர்த்துவதோடு மனஉளவியல் புதைந்து இருப்பதைக் காணமுடிகிறது. மனித நடத்தைகளையும், மனச்செயல்கள், எண்ணங்கள், தனிமனித மேம்பாடு, குடும்பம், சமூகம், ஆகியவற்றிற்கு உளவியல் அடித்தளமாய் அமைகிறது. மனித, சமூக முன்னேற்றத்திற்கு வள்ளுவர் அளித்த பெருங்கொடையை உளவியல் நோக்கில் திருக்குறள் என்னும் தலைப்பில் இக்கட்டுரையை ஆராய முற்படுகிறது.
உளவியல்
        உளவியல் (Psychology) என்னும் சொல் கிரேக்க மொழிச் சொற்களானஸைக்கி“ (Psyche) என்ற உயிரைக் குறிக்கும் சொல்லையும், “லோகஸ்“ (Logus) என்னும் அறிவியலைக் (Science) குறிக்கும் சொல்லையும் மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உளவியல் என்பது மனம் மற்றும் ஆன்மாவை ஆராயக் கூடியவை என முதலில் கருதப்பட்டது. வெகுகாலத்திற்கு முன்பே இக்கருத்துக் கைவிடப்பட்டு, நடத்தையைப் பற்றி முறையாக ஆராயும் துறையே உளவியல் என்றாயிற்று.
        மனிதனின் புறச்செயல்களை உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன் மூலம் அவை, எங்கனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்றும், சுற்றுச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்றும் விளக்குவதே உளவியலாகும்”. பேரா. கி. நாகராஜன்.(.1)
“J.B.வாட்சன், டோல்மன், ஹப், கத்தரே, ஸ்கின்னர் போன்றோர் உளவியலை நடத்தையியல் (Behaviourism) என்றே குறிப்பிடுகின்றனர். கண்ணால் காண முடியாத உள்ளத்தைப் பற்றி அறிவதைவிடக்  கண்ணால் பார்க்கக் கூடிய நடத்தையை உளவியலின் பொருளாகக் கொள்வதே அறிவுடைமயாகும் என்று உணர்த்துகிறார்”. பேரா. கி. நாகராஜன் (.3)
        மானிட நடத்தைகளையும் மூளைச் செயற்பாடுகளையும் அறிவியல் கண் கொண்டு ஆய்வதே உளவியலாகும். மனம் தொடர்புடைய அனைத்துச் செயற்பாடுகளையும் ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் இயங்கச் செய்வதும் உளவியலின் தன்மையாகும் என்கிறார்பாஞ். இராமலிங்கம் (.11).
        மனதின் செயல் மற்றும் நடத்தை இவையிரண்டையும் அறிவியல் முறையில் ஆய்வு செய்து பல்வேறு பிரிவுகளாகக் கிளைத்து வளர்ந்திருப்பதே உளவியலாகும். மனிதனின் நடத்தையானது மனதின் செயல்களின் தூண்டுதலினால் தனிப்பட்ட மற்றும் சமூக ஒழுக்கத்தைப் புரிந்து கொள்ள முயற்சி மேற்கொள்கிறது. உளவியலில் மனஉணர்வு, உணர்ச்சி, ஊக்கம், கவனம், ஆளுமை, நடத்தை நனவுநிலை ஆகியவை உள்ளார்ந்த தொடர்புகளாகும். ஆகவே ஆன்மா, மனம் என்ற நிலை மாறி நடத்தையை விளக்க முற்படுவதே உளவியலின் முதற்கடமையாகும் என்பதை உணர முடிகிறது. 
அறவியலும் உளவியலும்
இலக்கியம் என்பது மனிதனின் மனம், சொல், எண்ணம், செயல் ஆகியவை ஆழ் மனதில் உண்டாகும் உள்உணர்வின் வெளிப்பாடேயாகும். அத்தகைய வெளிப்படும் உணர்வுகள் ஒழுங்கிய அமைப்பில் சமூகத்தில் போற்றத்தக்க கூடியவையாகவும், மதிக்கத்தக்க கூடியவையாகவும் அமைய வேண்டும். உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மன உளவியலின் வழிகளை உணர்த்துகிறது.  உணர்வும் உளவியலோடு தொடர்புடையாகக் காணப்படுகின்றது.
        மனநிலைகளால் உடல்வழி ஏற்படும் செயல்முறை பற்றிய காரண காரிய உறவுக்கும்(causation) பௌதிக நிலையில் ஒரு நிலையினின்றும் வேறொரு நிலை வெளிவரும் போது நாம் கொள்ளும் (இதைத்தான் பௌதிக விஞ்ஞானத்திலும், இரசாயனத்திலும் கைக்கொள்கிறோம்) காரணகாரியத் தொடர்புக்கும் ஒருவகையில் வேறுபாடு உண்டு என்று கருதுவதுவரையிலும், செயலுக்கு முன்னர் நிகழும் மனநிலைகளைச் செயலின் காரணமெனக் (cause) கொள்ளலாம். நம் செயல்களைப் பற்றி நாம் கொள்ளும் அறநெறி முடிவுகளைப் பாதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது அறிவுக்குப் பொருத்தமாகத் தெரிகிறதுஎன்கிறார் வில்லியம் லில்லி.(.29)

உளப்பகுப்பாய்வு கோட்பாடு

        உளப்பகுப்பாய்வு கோட்பாட்டினைப் பற்றி சிக்மண்ட் ப்ராய்ட் என்பவரின் கூற்றுப்படி நனவலி மனதில் அடங்கியுள்ள பண்படா ஊக்கிகள், மனவெழுச்சிகள் போன்றவை ஒருவனது சிந்தனையையும், செயல்களையும், இவற்றின் அடிப்படையில் உருவாகும் அவனது ஆளுமையையும் தீர்மானிக்கின்றன. ஆளுமை அமைப்பு, தனித்தியங்கும் செயல்களையும், அதே சமயத்தில் ஒன்றோடொன்று இடைவினையாற்றி பாதித்துக் கொள்ளும் தன்மையும் பெற்ற மூன்று உள்ளமைப்புகளைக் கொண்டதாகும்.
                                        உளப்பகுப்பாய்வு
       

               
                அடிநிலைமனம்        நனவுநிலைமனம்        மேனிலைமனம்
                 இட் (Id)                  ஈகோ (Ego)           சூப்பர் ஈகோ(Super Ego)

அடிநிலைமனம்

        அடிநிலைமனம் ஆளுமையின் அடித்தளமாகும். இவை சின்னஞ்சிறு குழந்தைகளிடமும் உள்ளது. மரபுவழியே பெறப்படும் எல்லா ஊக்கிகளும் இதனுள் அடங்கும். ஈடு என்னும் தூண்டல் ஆற்றல் லிபிடோ என்னும் இன்ப இயல்பூக்கத்தின் இருப்பிடமாக உள்ளது. இவை விருப்பங்கள், தேவைகள் அனைத்தும் உடனடியாகப் பெற்று மகிழ்ச்சி அடையக் கூடியவை. ஆழ் மனத்தின் அகமகிழ்வைக் கொண்டது. உதாரணமாகச் செல்லும் வழியில் பணம் இருப்பதைக் கண்டால் எடுக்கத்தூண்டுவது. தன்னுடையது இல்லை என்று அறிந்தும் செயல்படுவது. இது அறநெறியைப் பின்பற்றாது. தன்னுடைய விருப்பங்கள், அதனால் ஏற்படும் இன்பங்களை மட்டும் நினைவில் கொள்ளும். இவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கும். அவா என்பது எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாமல் வருகின்ற விருப்பம் எனும் உணர்வு. தேவையற்ற ஆசைகளை மனத்தில் வளரவிட்டுக் கொண்டே செல்வர். இதனை வள்ளுவரும் தன் குறளில் குறிப்பிடுகிறார்.

                ஆராஇயற்கை அவாநீப்பின், அந்நிலையே
                பேராஇயற்கை தரும்.        (குறள்.370)

இவ்வரிகளில் பெருந்தகை, போதும் என்ற நிறைவை ஒருக்காலும் தாராத இயல்பை உடைய ஆசையை ஒருவன் ஒழித்து விடுவானேயானால், அசைக்க முடியாத இயற்கை இன்பத்தை அந்நிலையே அவனுக்குத் தரும் என்கிறார். மனிதன் தன் மனதில் தோன்றும் அவா, இச்சைகள், தேவைகள் அனைத்தும் நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணம் ஏற்படும். அதாவது இன்பத்தில் வாழ வேண்டும் நினைக்கும் மனம், அந்த இன்பத்தை அடைய தவறான செயல்கள் செய்ய முற்படும்பொழுது தயங்கமாட்டார்கள். பணம், பதவி, பட்டம், பாலியல் எனப் பல்வேறு  ஆசைகளால் உந்தப்பட்டு அவதிப்படுவர். இவற்றை அறவே நீக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். மற்றொருக் குறளில்,

                சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
                மற்று இன்பம் வேண்டுபவர்  (குறள்.173)

என்ற வரியில் எக்காலத்தும் நிலையான மகிழ்ச்சியை விரும்புவோர், பிறர் சொத்தைத் தமது ஆக்கிக் கொள்ளும் சிறிது நேர இன்பத்தை விரும்பி அறத்திற்கு மாறானவற்றைச் செய்யமாட்டார். ஆசையை ஒழித்து அறவழியில் சென்று தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது சிறந்தது. பிறர் பொருள்கள் மீது மோகம் கொள்ளுதல் கூடாது. தன் எண்ணத்தில் எழும் தவறானவற்றை ஒழித்து அறம் பின்பற்ற வேண்டும் என்கிறார். மேலும்,

                தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது     
                இன் உயிர் நீக்கும் வினை  (குறள்.327)

என்பது, ஒரு கொலை செய்தால் தான் உயிர் தப்பும் என்ற நிலையிலும் தன் உயிரைக் காப்பதற்காகக் கொலை செய்யாது இருத்தலே சிறப்பானதாகும். உயிரே போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் இன்னோர் உயிரை நீக்கும் வினையைச் செய்தல் கூடாது  என்கிறார் வள்ளுவர். உயிர் கொல்லாமை இருப்பதை வலியுறுத்தப்படுகிறது.

        அடிமனநிலை எனப்படும் ஈடு தம்முடைய விருப்பங்களுக்கும், உணர்வுகளுக்கும் தூண்டுதலாகக் காணப்படுகிறது. இவை எத்தகைய சட்டத்திற்கும் கட்டுப்படாமல், சமூக மரப்பிற்கும்,  அறநெறியைப் பின்பற்றாமல் அறநெறிகளைப் பற்றி ஈடு கவலைப்படுவதில்லை. தன்னுடைய இன்பத்திற்காகச் சுய அழிவிற்கு இவையே காரணமாக விளங்கிவிடும்.

ஊக்கி
       ஒரு மனிதனை இயக்கிக் குறிப்பிட்ட வழியில் செயல்புரியச் செய்யும் நனவு நிலையைச் சார்ந்த உள நியதியைஊக்கிஎனக் கூறலாம். ஓர் உயிரின் நடத்தை, இலக்கை நோக்கி மேற்கொள்ளப்படும் செயலாகும். ஊக்கம் என்ற செயல் அதாவது ஊக்குவித்தல் நடைபெற தூண்டும் காரணிகளை ஊக்கிகள் என்று குறிப்பிடுகிறோம்.  இதை வள்ளவரும் தனது குறளில் ஊக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஊக்கமும் முயற்சியும் குடிமக்கள் அனைவருக்கும் தொழில்களில் வேண்டப்படுவனவாகும் என்கிறார்.
        ஒருவனின் சிந்தனையைக் கொண்டு அவனுடைய வாழ்க்கையை உணரமுடியும். ஊக்கம், உயர்வுள்ளலும் உள்ளவரே வாழ்கின்றனர் என்பதை,

                உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை, அஃது இல்லார்
                மரம், மக்கள் ஆதலே வேறு.  (குறள். 600)

என்னும் வரிகளில் ஊக்கம் உடைய உள்ளமே ஒருவருக்குரிய வலிமையாகும். அவ்ஊக்கம் இல்லாதார் வெறும் மரங்களே. தோற்றத்தில் மனிதர்களாக இருக்கிறார்கள் என்கிறார் வள்ளுவர்.  இங்கு ஊக்கம் இல்லாதவரை மரங்களுக்கு ஒப்புமைப்படுத்துகிறார்.  மரத்தினால் பல பயன்கள் இருந்தாலும் பாலை நிலத்தில் பட்டுப்போன மரம் போல் காணப்படுவான். பட்டுப்போன மரம் விறகிற்காகப் பயன்படும். ஆனால் ஊக்கமில்லாதவரோ அந்த மரத்தை விட இழிந்தவராகக் காணப்படுகின்றனர்.

        சமூகத்தில் வாழும் மனிதனுக்கு ஊக்குமே சிறந்ததாகும். ஊக்கம் இல்லாதவர் செல்வம் உடையவராக இருந்தாலும் அதை இழப்பர். அதனை,

                உள்ளம் உடைமை உடைமை, பொருள்உடைமை
                நில்லாது நீங்கி விடும்.  (குறள்.592)

என்னும் குறட்பாவில் ஊக்கம் உடைமையே நிலையான செல்வமாகும். பொருள் உடைமை நிலையில்லாத செல்வமாகும். ஆகவே பொருள் நிற்காது ஒருவரை விட்டுப் போய்விடும் என்கிறார் வள்ளுவர். ஒரு மனிதன் தானாகவே உணர்ந்து, அறிவினால் செல்வத்தைத் தேடவேண்டும் என்ற நோக்கம் ஈட்டும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆகவே ஊக்கம் முதன்மைக் கொண்டதாகக் காணமுடிகிறது.

நனவுநிலைமனம்
        தன்னுணர்வு நிலை எனப்படும் இது தொடக்கத்திலேயே தோன்றுவதில்லை. சூழ்நிலையின் உண்மை நிலைமைகளுடன் நடத்தை பொருந்திப் போக வேண்டிய தேவையின் காரணமாகவேஈகோஎழுகிறது. ஈகோ என்பதுஇட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க கூடியவையாகும். நல்லொழுக்கப் பண்புகளை மேற்கொள்ள ஈகோ செயல்படுகிறது. மனஆற்றலைக் கட்டுப்படுத்தினாலே சமுதாயம் மற்றும் தனிமனிதன் நலமும் பாதுகாக்கிறது. கட்டுப்படுத்துகின்ற ஆற்றல்களில் முதன்மையானது ஈகோ என்னும் தன்முனைப்பாகும்.
        வள்ளுவர் தன் குறலில் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தன் உள்ளத்தாலும் உடலாலும் சொல்லாலும் என எவையெல்லாம் பிறர்க்கு நலம் பயக்க முடியுமோ அதையெல்லாம் செய்வதே அறமாகும். அதனை,
                எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
                கள்ளாமை காக்க, தன் நெஞ்சு   (குறள்.281)

என்ற வரியில் பிறரால் பழிக்கப்படாத பெருமைமிக்க வாழ்வை விரும்புகிறவன் பிறருடைய சிறிய பொருளைக் கூட எடுத்துக்கொள்ள வாய்ப்பிருந்தும் எடுக்காமலும், மனத்தில் எடுக்க நினைக்காமலும் தன் நெஞ்சைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இன்னொருவன் பொருளை எடுப்பதே பாவம் என்கிறார் வள்ளுவர் கள்ளாமையை வலியுறுத்துகிறார். அதாவது இட் டில் பிறர் பொருளை எடுக்கத்தூண்டுவது. ஈகோ வில் அவற்றை எடுக்காமல் கட்டுப்படுத்துவது. பிறர் பொருளைக் களவாடுதல் அறத்திற்குப் புறமான செயல் இச்செயல் தீங்கினை ஏற்படுத்தும்.  மனிதன் மனம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வள்ளுவர் அக்காலத்திலே அறிவுறுத்துள்ளதை உணர முடிகிறது. ஒழுக்கம் தான் ஒரு மனிதனை மேன்மையுறச் செய்யும் என்னும் மனகருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
        மனிதன் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பயன்பட வாழ்வதற்கு எண்ணம், சொல், செயல் ஆகியவை நல்லவனாக வாழ வழிகாட்டுகிறது. மாசுஇல்லாத மனம், ஆசை, பொறாமை, சினம் ஆகியவை இல்லாமல் இருப்பதே அறமாகும் என்பதை,
                அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், நான்கும்
                இழுக்கா இயன்றது அறம்     (குறள்.35)
இக்குறளில் மனிதன் மனத்தாலும் செயலாலும், பேச்சாலும், எண்ணங்களாலும் அறநெறிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அடக்கம் இல்லாமல் செருக்கோடு வாழ்தல் அழிவைத்தரும் ஆகையால் செருக்கின்றிப் பணிவுடன் நடந்து கொள்ளுதல் வேண்டும். பெரியோர், சான்றோரிடம் நாவடக்கம் வேண்டும், ஆசை வழியாகச் செல்லாமல் புலனடக்கம் செய்தல் வேண்டும் என்கிறார். இதற்கு மனமே முக்கிய காரணமாக அமைகிறது. தன் தேவைகளையும், ஆசைகளையும், விருப்பங்களையும், நிறைவேற்றிக்கொள்ள முற்படும்பொழுது தான் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் ஆகவே கட்டுபாடோடு இருத்தல் வேண்டும். இதனை,
                செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
                ஆற்றின் அடங்கப் பெறின்.    (குறள்.123)
என்ற வரிகளில் அடக்கத்தின் நன்மைகளை ஆராய்ந்து தெரிந்து மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினால் அக்கட்டுப்பாடு நல்லோரால் அறியப்பட்டு ஒருவருக்கு விழுப்பத்தைச் சேர்க்கும். ஒருவரின் உள்ளத்தையும், உள்ளத்தால் எழும் பேச்சையும், இவ்விரண்டின் உணர்வினால் எழும் உடலையும் கட்டுப்படுத்தினாலே ஒழுக்கத்தில் மேன்மையுற்று விளங்குவர். மனதைக் கட்டுப்படுத்தாமல் இச்சைக்கு ஆசைப்பட்டு தகாத செயலில் ஈடுப்பட்டால் அழிவை மேற்கொள்வர். ஒருவனது மனக்கட்டுப்பாடே உயர்வான ஒழுக்கத்தைத் தரும்.
                நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
                மலையினும் மாணப் பெரிது   (குறள்.124)
என்ற குறளில் எந்த நிலையிலும் உள்ளம் திரியாமல் கட்டுப்பாடு கொண்டு வாழ்பவனின் பெருமிதத் தோற்றம் மலையை விட மிகப் பெரியதாகும். மலைகாற்று, மழை, வெயில், இவற்றால் எந்தப் பாதிப்பும் வந்தாலும் அசையாமல் ஈடு கொடுத்து நிற்கின்றன. அதே போன்றும் மனிதனும் சமூகத்தால் பாதிப்பு ஏற்படும் பொழுது மனம் தளராமல் கட்டுப்பாடோடு செயல் புரிய வேண்டும் என்கிறார்.
                தன்னைத்தான் காக்கின், சினம்காக்கக் காவாக்கால்
                தன்னையே கொல்லும் சினம்   (குறள். 305)
என்ற வரிகளில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒருவன் முதலாவது செய்ய வேண்டியது சினத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தத் தவறினால், சினம் அவனையே அழித்துவிடும். ஒருவர் பொய் கூறினால் கோபம் ஏற்படும், தீங்கு செய்தல்  கோபம் உண்டாகும். இதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்குதல் கூடாது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தனக்குத் தீங்கு செய்தாலும் கூட அவர்களுக்கு நல்லதே செய்தல் வேண்டும். பிறர் நம்மை கோபப்படுத்தினாலும் நாம் கோபப்படாமல் இருத்தலே நல்லது என்கிறார். ஒவ்வொரு செயல்களும் மனத்தால் ஏற்படும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
மேனிலைமனம்
        மனித வாழ்க்கையில் உயர்ந்தவையாக மக்கள் கருதுபவற்றை சூப்பர்ஈகோ வலியுறுத்துகிறது. சமூகத்தில் செயல்படும் அனைத்து அறநெறிக் கட்டுப்பாடுகளுக்கும் பொறுப்பை ஏற்றும் கொண்டு அவற்றை வழி நடத்திச் செல்வதாகவும் இவைக் காணப்படும். எந்தக் காலகட்டத்திலும் மனமான சூப்பர் ஈகோ  தவறான வழியிலோ, செயலிலோ ஈடுபடத் தூண்டாது நல்லதைக் கடைப்பிடித்து அறநெறிக் கோட்பாட்டைப் பின்பற்றும்.
        மேனிலை மனமானசூப்பர் ஈகோசுமார் 6 வயதில் எழத் தொடங்குகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றோர் வலியுறுத்தும் சமூக நடத்தை மதிப்புகள் (Social Valuses) தரங்கள் (Norms) அறக்கோட்பாடுகள் (Moral Codes) போன்றவற்றை, குழந்தை தன் உள்ளத்துள் அமைத்தலால் (Internalisation) இம்மேனிலை மனம் உருவாகிறது. மனசாட்சி (Conscience) வாழ்க்கைக் குறிக்கோள்கள்(Ego ideals) ஆகியன மேனிலை மனத்தின் கூறுகளாகும்.  சமூகம் ஏற்காத இட் டின் ஊக்கிகளைத் தடை செய்தல், நல்லெழுக்கப் பண்புகளை நடத்தையினில் மேற்கொள்ள ஈகோ வைத் தூண்டுவது, குறைபாடு களற்ற நிறைவினைப்(Perfection) பெறுதலை இலக்காக அமைத்துக் கொள்ளச் செய்தல் ஆகியன மேனிலை மனத்தின் செயல்களாகும் என்கிறார் ஃப்ராய்ட்(.354)”.
        மனச்சான்று என்பது ஒருவனுடைய செயல்களிலும், அவனை ஊக்கும் எண்ணங்கள் அல்லது ஊக்கியில் விளங்கும் நல்லதை ஏற்றுத் தீயதைக் கண்டிக்கும் ஒருவகை விதி அல்லது உளத்திறனே மனச்சான்றாகும்.
        ஆங்கிலேய அறவழியாளர் பட்லர் மனச்சான்றின் இரு நிலைகளை வேறுப்படுகத்துகிறார். () மனச்சான்றிடம் அறியும் அல்லது ஆராயும் கடமை ஒன்று அமைந்திருக்கிறது. இது ஒழுக்கங்களையும் செயல்களையும், உட்கிடைகளையும், ஊக்கிகளையும் அவற்றில் அமையும் நன்மைதீமைகளை அறியவேண்டுமென்ற நோக்கத்துடன் ஆராய்கிறது. () மனிதனின் அமைப்பையும், அவனது இயக்கத்துக்கெல்லாம் தலைமை தாங்கி, அவனையே ஆளுகிறது. அதற்கு உரிமை இருப்பதுபோல் வலிமை இருந்தால், அதிகாரம் இருப்பது போல் ஆற்றல் இருந்தால் இந்த உலகத்தை அதுவே ஆளும்என்கிறார் வில்லியம் லில்லி. (பக்.107-108)                     
        நாம் ஏதாவது தவறு செய்தால் அதைப்பற்றி நினைத்துக் கவலைப்படுவது மனச்சான்றாகும்.  சூழ்நிலைக் காரணமாகச் சில சமயங்களில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது இவை செய்யக் கூடாது என்ற உள்ளுணர்வு எழுகிறது. சில வேளைகளில் செய்யாமல் தவிர்க்கிறோம். அதே நேரத்தில் அறவழி ஏற்றுக்கொண்டதாக இருந்தால் அதை நாம் முற்படுகிறோம். எல்லாமே மனத்தால் நிகழக் கூடியவையாகிறது. வள்ளுவரும் தூய உள்ளம் தான் மனச்சான்றுக்குப் பொருத்தமாக அமையும் என்பதைத் தன் குறளால் குறிப்பிடுகிறார். அதனை,
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல், அனைத்து அறன்
                ஆகுல நீர, பிற.               (குறள்.34)
என்னும் வரிகளில் மாசு மறு அற்று இருக்கும் மனமே, அனைத்தும் அறம் ஆகும். தீய செயல்கள் புரியாமல் தூய்மையாகக் காணப்படும் உள்ளம் தான் மனச்சான்றை மதித்துப் போற்றும் அதோடு இல்லாமல் அறத்தினைக் களமாகக் கொண்டு காணப்படும். மனதில் எழும் எண்ணம், செயல், உணர்வுகள், அனைத்தும் அறத்தைச் சார்ந்தே இருக்கும். ஈடுபடும் செயல்களில் நல்லது, தீயது எனப் பகுத்தாய்ந்து செயல்படுவதே சிறந்தது. இந்த உலகத்தில் வாழும் மனிதர்களின் மனதில் எழும் உணர்வுகளையும், எண்ணங்களையும், மனத்தின் இயல்புகள், எனப் பல்வேறு நிலைகளில் சிந்தித்த வள்ளுவர்  தங்கள் மனதைத் தீய செயல்கள் நெருங்க விடாமல் இருத்தல் வேண்டும் என்று இடித்துரைக்கிறார். அதனை,
                பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த
                நன்மை பயக்கும் எனின்      (குறள்.292)
என்னும் வரிகளில் குற்றமில்லாத நன்மையை ஒருவர்க்கு ஒருவர் சொல்லும் பொய் பெற்றுத் தருமானால், அதுவும் வாய்மையாகக் கொள்ளப்பெறும். மக்கள் நலம் கருதி சில சந்தர்ப்பங்களில் பொய் உரைப்பதும் வாய்மையினுள் அடங்கும். பொய் பேசினால் தீமையைத் தரும் என்று கருதிய வள்ளுவர், பொய்யினால் நற்செயல் உண்டாகும் என்று இருந்தால் அவை ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்கிறார். மேலும்,
                தன் நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின்
                தன் நெஞ்சே தன்னைச் சுடும்   (குறள்.293)
என்பது மனச்சான்று இடித்துக் கூறுதலை மீறிப் பொய் சொல்லாதே, மீறிப் பச்சைப் பொய் உரைத்தால் அவரவர் மனச்சான்றே சுட்டு வருத்தும் என்கிறார். பொய் சொல்லாமல் இருத்தலே தூய்மை. மனித சிந்தனைகளில் சிறந்தது.
        சமூகநலனே பெரிதாகக் கருதி தன் வாழ்க்கையை தியாகம் செய்வர். பொது நலத்துடன் வாழ வேண்டும் எனத் தன்னலம் கருதாது பிறர் நலனுக்காக வாழ்தல் நன்மைப்பயக்கும் என்கிறார் வள்ளுவர்.
                ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு அவாம்
                பேர் அறிவாளன் திரு.        (குறள்.215)
என்னும் குறளில் உலக மக்களின் நலம் விரும்பும் சிறந்த அறிஞரிடம் சேர்ந்திருக்கும் செல்வம் ஊர் நடுவே உள்ள நீர் நிலை கரை புரள நிரம்பி இருப்பதற்குச் சமம் என்கிறது. சான்றோர்களிடம் நிறைந்து இருக்கும் செல்வம் தன் குடும்பம், குழந்தை என்று இல்லாமல் வறியவர்களுக்குக் கொடுத்து தானும் வாழ்தலை உணர்த்துகிறது. தமிழ் மரபில் பிறர்க்கு ஈகை வழங்குதலைச் சிறந்த அறமாகக் கருதப்படும் என்று உள்ள உணர்வால் உணர்த்துகிறார் வள்ளுவர். மனமானது தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி சமுதாயத்தை ஒட்டி ஒழுகுதல் வேண்டும். பண்டைத் தமிழர் மறுமைப் பயன் நோக்காது பிறர் வறுமையைப் போக்குதலை நோக்கமாகக் கொண்டு ஈகைப் புரிந்தனர் என்பது நாம் அறிந்த ஒன்றே.    
        பகுத்துண்டு வாழ்தல் சிறந்தது என்கிறார் வள்ளுவர். பிறர்க்கு உதவியாக வாழ்ந்து, சமுதாய முன்னேற்றத்திற்காக உறுதுணையாக  இருக்க வேண்டும். தன் குடும்பத்தை மட்டும் எண்ணி வாழாமல் கிடைத்தப் பொருளைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு வாழ்தல் வேண்டும் என்கிறார். அது மட்டுமல்லாமல், பல உயிர்களையும் காப்பாற்றி பிறர்க்கு உதவியாக வாழும் வாழ்க்கையே சிறந்ததாகும்.
                பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
                தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்.322)
என்ற வரிகளில் தான் உண்ண இருப்பதனைப் பசித்த உயிர்கள் அனைத்திற்கும் பகுத்துக் கொடுத்து உண்ணச் செய்து அனைத்து உயிர்களையும் காத்தல் அறநூலுடையார் தொகுத்த அறங்கள் எல்லவாற்றிலும் தலைச்சிறந்தது. ஆதிச் சமூகத்தில் குழுத் தலைவன் வேட்டையாடி வந்ததைத் தான் உண்பதோடு தன் சமூகத்திற்குக் கொடுத்துப் பகுத்துண்டு வாழ்ந்தான். பிறருக்குக் கொடுத்து வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை அத்தகைய வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் சமூகத்தில் உயர்நிலை அடைவர். சிறுகுடியில் வாழும் தன்மை உடையவர்களாக இருந்தாலும் கொடுத்து வாழ்ந்தால் மேன்மை அடைவர். பிறருக்குக் கொடுத்து வாழும் மனம் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனுடைய மனம் சாரந்தே என உணர்த்துகிறார்.


நிறைவாக
        மனித சமூகத்தில் நிகழவிற்கும் செயல்கள் அனைத்திற்கும் மனமே காரணமாக அமைகின்றது. மனம் போன போக்கில் மனிதன் செல்கின்றான். அவற்றில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. மானிட சமூகம் நன்மை பெற வேண்டுமானால் அறவழியில் பின்பற்றி நடத்தலே நன்மை பயக்கும். இதைத் தான் வள்ளுவர் வலியுறுத்துகிறார். திருக்குறள் ஓர் அறநூலாக மட்டுமல்லாமல் சமுதாயத்தை மாற்றக் கூடிய ஒன்றாகும். அன்றைய காலகட்டத்திலே மனித உள்ளத்தில் நிகழும் எண்ணங்கள், செயல்கள், ஆகியவை தம் குறளில் பிரதிபலிப்போடு, மனித மன உளவியலை ஆழமாகப் புரிந்துகொண்டு வள்ளவர் குறளை இயற்றியுள்ளார். குறளை உளவியலோடு ஆராயும் பொழுது பல்வேறு விசயங்களை அறிவதோடு அவற்றை நோக்க வேண்டியுள்ளது.
சான்று நூல்கள்
1.   அறவாணன்... அற இலக்கிய களஞ்சியம், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை.29, முதற்பதிப்பு, 2008.
2.   இராமலிங்கம்.பாஞ். மானிட உளவியல், சாரதா பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை.14, ஜீன்.2007.
3.   நாகராஜன்.கி, கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல், இராம் பதிப்பகம், சாலிகிராம்ம், சென்னை,93,மே.2009.
4.   வில்லியம் லில்லி, அறவியல்ஓர் அறிமுகம், தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடுஅரசாங்கம், டிசம்பர் 1964.